| ADDED : டிச 26, 2025 05:43 AM
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. மதுராந்தகம் டவுன் பகுதியில் இருந்து சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலை, பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் அனைத்து விதமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகும். இதில், மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட கிராம சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகும் வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், செங்குந்தர் பேட்டை அருளாலீஸ்வரர் கோவில் அருகே புறவழிச்சாலை பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தி விடுகின்றனர். இதனால், புறவழிச் சாலையில் வார விடுமுறை மற்றும் முக்கிய நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பறிமுதல் வாகனங்கள் நிறுத்தும் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த, மதுராந்தகம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.