செங்கல்பட்டு:கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம், நாளை நடக்கிறது.இது குறித்து, செங்கல்பட்டு மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நந்தகுமார் அறிக்கை:இந்த ஆண்டுக்கான கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில், நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் அனைத்தும் இத்திட்டம் பொருந்தும்.இத்திட்டத்தின்படி, கணக்கிடப்பட்ட நிலுவை தொகையில் 25 சதவீதத் தொகையை, அரசாணை வெளியிடப்பட்ட கடந்த ஆண்டு டிச., 13ம் தேதியில் இருந்து, வரும் 13ம் தேதிக்குள் செலுத்தி, வங்கி மற்றும் சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.மீதமுள்ள 75 சதவீத தொகையை, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள், அதிகபட்சமாக ஆறு தவணைகளுக்குள் செலுத்த வேண்டும்.கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் வரை, 6 சதவீதம் சாதாரண வட்டி வசூலிக்கப்படும்.கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். சிறப்பு கடன் தீர்வு திட்டம் தொடர்பான சிறப்பு முகாம்கள், அந்தந்த கூட்டுவுறச் சங்கங்களில், வரும் 2ம் தேதி நடக்கிறது.இந்த முகாம், வரும் 13ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தகுதி வாய்ந்த கடன்தாரர்கள், தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை உடனடியாக அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.