செய்யூர்:செய்யூர் அருகே விளாங்காடு ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக கொக்கரந்தாங்கல், தென்னேரிப்பட்டு, அமந்தங்கரணை என, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு சென்று, இறுதியாக வெடால் ஏரியில் இணைந்து, அதன்பின் கழிவெளியில் கலக்கிறது.உபரிநீர் கால்வாய், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்து கால்வாயாகவும் உள்ளது. 15 கிலோமீட்டர் நீளமுடைய இக்கால்வாய், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.பல ஆண்டுகளாக இந்த உபரிநீர் கால்வாய் சீரமைக்கப்படாமல் இருப்பதால் மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மழைக்காலத்தில் பல இடங்களில் கால்வாயின் கரைகள் உடைந்து, விவசாய நிலங்களில் தண்ணீர் புகுவது வாடிக்கையாக உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளின் நலனை கருதி, ஏரியின் உபரிநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறியதாவது:வெடால் கிராமத்தில், 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றேன். ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மழைக்காலங்களில் மழைநீர் வயலில் தேங்கி பயிர்கள் சேதமடைகின்றன. மேலும், இப்பகுதியில் கோடைக்காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, கால்வாயை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். மேலும், உபரிநீர் கால்வாய் நடுவே தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.