| ADDED : பிப் 05, 2024 06:44 AM
நெய்குப்பி : கல்பாக்கம் அருகில், அணுசக்தி துறையின் அணுபுரம் நகரியம், நெய்குப்பி ஊராட்சி பகுதி ஒருங்கிணைந்ததாக உள்ளது.நகரியம் மற்றும் சுற்றுப்புற பகுதியினரின் வர்த்தக இடமாக, நெய்குப்பி விளங்குகிறது. நகரிய பகுதியினர், தங்கள் தேவைகளுக்காக, நெய்குப்பி சென்று வரும் நிலையில், சதுரங்கப்பட்டினம் சாலையின் இருபுறமும், பலவகை கடைகள் அதிகரித்துள்ளன.கடைகளில் கழிக்கப்படும் குப்பையை, ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்ற வேண்டும். ஆனால், கடைக்காரர்களோ, நகரிய முகப்பு பகுதியில், சுற்றுச்சுவரை ஒட்டி சாலையிலேயே குப்பையை குவிக்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு, குப்பை துர்நாற்றத்தால், நகரிய மக்கள், சாலையில் செல்லும் பயணியர் முகம் சுளிக்கின்றனர்.பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலையில் குப்பை பறந்து, இருசக்கர வாகன பயணியர் திணறுகின்றனர்.அணுசக்தி துறை பகுதியை ஒட்டியே இத்தகைய அவலம் ஏற்பட்டும், ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. திருக்கழுக்குன்றம், வட்டார வளர்ச்சி நிர்வாகம், குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.