| ADDED : ஜன 18, 2024 01:49 AM
செங்குன்றம்:பொன்னேரி அடுத்த மீஞ்சூரைச் சேர்ந்தவர்கள் சண்முகம், அவரது மனைவி மகேஸ்வரி, மகள் கவி வர்ஷா, 17, மகன் கவி வர்ணிஷ், 18. இவர்கள், சென்னையில் இருந்து 'டாடா சபாரி' காரில், நேற்று மீஞ்சூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.வண்டலுார் - -மீஞ்சூர் புறவழிச்சாலையில், செங்குன்றம் அடுத்த நல்லுார் அருகே முற்பகல் 11:30 மணி அளவில், முன்னால் சென்ற டிராக்டர் மீது, அதே திசையில் வேகமாக வந்த சண்முகத்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.இதில், சாலையோரம் துாக்கி வீசப்பட்ட கார் உருக்குலைந்தது. இந்த விபத்தில் கவி வர்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். அதே போன்று, சோழவரத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சந்தோஷ், 22, என்பவரும் காயமடைந்தார். இதில், கவி வர்ணிஷ் தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர்.