நகர்ப்புற வாழ்விட வாரியத்தில் 19 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை
செங்கல்பட்டு:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 19 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை, அமைச்சர் அன்பரசன் நேற்று முன்தினம் வழங்கினார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், இலவச வீட்டுமனை பட்டா, கிராமப்புறங்களில் டவுன் பஸ் வசதி, பட்டா மற்றம், விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 346 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அமைச்சர் அறிவுறுத்தினர்.அதன்பின், முருகமங்கலம் கிராமத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பில், 19 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.அதோடு, மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, திருமண உதவித்தொகையாக 25,000 ரூபாய், எட்டு கிராம் தாலிக்கு தங்கம் ஆகியவற்றையும், அமைச்சர் வழங்கினார்.இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி மற்றும் சப்- - கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டர் அனாமிகா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.