செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,250 ஏக்கரில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில், நெல் விதைகள் வழங்கப்பட்டு வருவதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.மாவட்டத்தில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 257 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது.பாலாற்றங்கரை பகுதியில், ஆழ்துளை கிணறுகள், கிணற்று நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, இயற்கை விவசாயத்திற்கு அடுத்து, பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை. மாப்பிள்ளை சம்பா நீரிழிவு நோய்க்கும், துாயமல்லி அரிசி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சீரக சம்பா இதய நோய், மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கும் சிறந்ததாக அமைந்துள்ளது.அதனால், பாரம்பரிய உணவு முறைக்கான உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி, சீரக சம்பா, செங்கல்பட்டு சிறுமணி ஆகிய நெல் விதைகள், 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.சேலம், விருதுநகர், ஈரோடு, திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து, செங்கல்பட்டு சிறுமணி நெல் விதைகள் வாங்கப்படுகின்றன.பாரம்பரிய நெல் ரகங்கள், ஒவ்வொரு ஆண்டும் 5,000 கிலோ விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, 7,420 கிலோ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 4,800 கிலோ இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.பாரம்பரிய நெல் விதை, 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், மானிய விலையில், 25 ரூபாய்க்கு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்னும், 2,620 கிலோ நெல் விதைகள் வழங்க வேண்டி உள்ளது. மாவட்டத்தில் அதிக அளவாக, பவுஞ்சூர் வட்டாரத்தில், 1,050 கிலோ பாரம்பரிய நெல் விதை, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மதுராந்தகம் வட்டாரத்தில் 850 கிலோ, சித்தாமூர் வட்டாரத்தில் 750 கிலோ, அச்சிறுபாக்கம் வட்டாரத்தில் 650 கிலோ விதை நெல் வழங்கப்பட்டு உள்ளது.இந்த வட்டாரங்களில் உள்ள விவசாயிகள், பாரம்பரிய நெல் சாகுபடி செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இந்த பயிர் சாகுபடி, ஐந்து மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடைக்கு பின், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாக்களிலும், 1,250 ஏக்கரில், சம்பா, நவரை பருவங்களில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 23 ஆண்டுகளாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறேன். நாளுக்கு நாள் விவசாயத்தில் செயற்கை மருந்து பயன்பாடு அதிகரிப்பதால், மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என, இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்து, இரண்டு ஆண்டுகளாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் விவசாயம் செய்து வருகிறேன். இந்த ஆண்டு, வேளாண் துறையிடம் மானிய விலையில் விதை வாங்கி, துாயமல்லி மற்றும் மாப்பிள்ளை சம்பா ரகங்களில் பயிர் செய்தேன். நல்ல விளைச்சல் இருந்தது. அடுத்த ஆண்டு, பாரம்பரிய நெல் விவசாயம் செய்யப்படும் பரப்பளவை அதிகப்படுத்தி சந்தைப்படுத்த உள்ளேன்.-- மு.குமார், விவசாயி, இரணியசித்தி.பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய, விவசாயிகள் ஆர்வமாக வருகின்றனர். மக்கள் குறை தீர்க்கும் நாள், மனுநீதி நாள் கூட்டங்களில், பாரம்பரிய நெல் விதைகள் குறித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். உழவன் செயலியில் விதை நெல் கேட்டு பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க உதவி இயக்குனரை அணுகலாம்.- அசோக்,வேளாண்மை இணை இயக்குனர்,செங்கல்பட்டு மாவட்டம்.