உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை ஸ்தலசயனர் கோவிலுக்கு பிப்., 1ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

மாமல்லை ஸ்தலசயனர் கோவிலுக்கு பிப்., 1ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு, பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இயங்கும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வைணவ சமயத்தின், 108 திவ்யதேச கோவில்களில், 63வதாக விளங்குகிறது.ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியர், கோவிலில் வீற்று, அருள்பாலிக்கின்றனர். அதன் மஹா கும்பாபிஷேகம், கடந்த 1998ல் நடைபெற்றது. ஆகம நடைமுறைகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதை தொடர்ந்து நடத்த வேண்டும். மீண்டும் நடத்தப்படாமல் தாமதமானது. இதுகுறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. அத்துறை நிர்வாகம் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, அதன் பழமைத்தன்மை மாறாமல் புனரமைக்க, உயர் நீதிமன்ற வல்லுனர் குழுவிடம் அனுமதி பெற்று, 2021ல் பாலாலயம் நடத்தியது.நிர்வாகமே திருப்பணிகள் மேற்கொள்ள துவக்கத்தில் முடிவெடுத்து, பின், நன்கொடையாளரை நியமித்து அனுமதித்தது.சுவாமியர் சன்னிதிகள், விமானங்கள் முற்றிலும் புனரமைக்கப்பட்டன. கோவில் கருங்கல் சுவற்றில் தீட்டியிருந்த சிகப்பு, வெண்மை சுண்ணாம்பு பூச்சை முற்றிலும் அகற்றி, பாறைகல்லின் இயல்புநிறம் மீட்கப்பட்டது. மேல்தளம் புதுப்பித்து ஓடுகள் பதிக்கப்பட்டன. சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.முன்மண்டபத்தின் முன்புற தரை, கருங்கல் தளமாக மாற்றப்பட்டது. தற்போதைய கொடிமரத்தின் உறுதித்தன்மையை பரிசோதித்து, அதே மரத்தை பராமரித்து பயன்படுத்தப்படுகிறது.இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடக்கிறது. இச்சூழலில், பணிகள் முன்னேற்ற நிலையை, இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோருடன், நேற்று ஆய்வு செய்தார்.கோவிலில் அகற்றிய பழமையான கற்களை பாதுகாப்பது, கோவில் வளாகத்தில் பெய்யும் மழைநீரை தேங்கவிடாமல், நிலத்தடி குழாய் அமைத்து வெளியேற்றுவது, இடையூறு மரங்களை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தினர்.ஹிந்து சமய அறநிலையத் துறையினர் கூறுகையில், ''புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இறுதிப் பணிகள் நடக்கிறது. பிப்.,1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை