| ADDED : பிப் 04, 2024 02:44 AM
சென்னை:கேரளாவைச் சேர்ந்த அமல் என்பவர் அமெரிக்கா செல்ல விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். கடந்த 30ம் தேதி, நேர்முக தேர்விற்கு வந்தபோது சமர்ப்பித்த ஆவணங்களை துாதரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், சென்னை பல்கலை சான்றிதழ் போலி என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.உடனே, இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ரிஸ் ராயல் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஷாஹினா மோல் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது.தொடர்ந்து, ஆய்வாளர் பூமாறன் தலைமையிலான தனிப்படையினர் கேரளா சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து, கணினி, போலி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.