மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இது, வைணவ சமய 108 திவ்விய தேசங்களில், 63ம் தலமாக விளங்குகிறது.ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ராமர், 12 ஆழ்வார்கள், கருடர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமியர் வீற்றுள்ளனர்.விஜயநகர பேரரசின் பராங்குச மன்னர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. கடந்த 1998ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய நிலையில், 25 ஆண்டுகள் கடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டது.தொடர்ந்து, 2021 நவம்பரில், பாலாலயத்துடன் திருப்பணிகள் துவக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. சுவாமியரின் சன்னிதிகள்,மஹா மண்டபம், ஊஞ்சல் மண்டபம், பழங்கால சன்னிதி, வாகன மண்டபம் உள்ளிட்டவை, பழமை மாறாமல் பாரம்பரிய தன்மையுடன் புனரமைக்கப்பட்டன.பழைய கொடிமரம் பராமரிக்கப்பட்டது. அதன் பீடத்திற்கும், த்வஜஸ்தம்பம் பீடத்திற்கும், தங்கமுலாம் பூசப்பட்டது. புதிய மின்தடம் ஏற்படுத்தி, விளக்குகள் பொருத்தப்பட்டன.வழிபாட்டிற்கு இடையூறான கான்கிரீட் கட்டமைப்புகள் அகற்றப்பட்டு, ஆகம, வாஸ்து குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன.மேலும், தரைதளத்தில் கற்கள் பதிப்பு, அலுவலகத்திற்கு கருங்கற்களில் கட்டடம், கோவில் வளாகத்தில் கற்களில் நடைபாதை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டன. கங்கைகொண்டான், பூதத்தாழ்வார் அவதார தல மண்டபங்கள் வளாகம் பராமரிக்கப்பட்டது.மஹா கும்பாபிஷேகம்,நாளை காலை 7:30 - 9:00 மணிக்குள் நடைபெறுகிறது. அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, அன்பரசன், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.மாலை 4:30 மணிக்கு, கமலத் தொட்டியில் நிலமங்கை தாயார் புறப்பாடு நடக்கிறது. 6:00 மணிக்கு, பெருமாள், தாயார் ஊஞ்சலில் சேவையாற்றுகின்றனர்.இரவு 7:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் ஸ்தலசயன பெருமாள், ஹம்ச வாகனத்தில் பூதத்தாழ்வார் வீதியுலா செல்கின்றனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று, நைமித்திக ஆராதனம், அனுக்ஞை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட வழிபாட்டு சடங்குகள் துவங்கின.
போக்குவரத்து ஏற்பாடுகள்
கோவிலுக்குள் பக்தர்கள் நுழைந்து வெளியேறும் பாதை, அதற்கான தடுப்புகள் குறித்து, போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத் ஆய்வுசெய்து, அதுகுறித்து போலீசாரிடம் அறிவுறுத்தினார். சுற்றுப்புற சாலைகளை பார்வையிட்டார்.அரசுப் பேருந்துகள் செல்லும் பாதை குறித்து, போலீசார் கூறியதாவது:திருவான்மியூரிலிருந்து வரும் மாநகர் பேருந்துகள், கங்கைகொண்டான் மண்டபம் சந்திப்பு பகுதியில், பயணியரை இறக்கி ஏற்றி, திருக்கழுக்குன்றம் சாலை, புறவழிச் சாலை வழியே திரும்பி செல்ல வேண்டும். செங்கல்பட்டு பகுதியிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள், புறவழிச்சாலை வழியே, கங்கைகொண்டான் மண்டபம் பகுதி சென்று, பயணியரை இறக்கி ஏற்றி, வழக்கமான திருக்கழுக்குன்றம் சாலை பாதையில் திரும்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.