| ADDED : டிச 04, 2025 02:44 AM
செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை நடுவே ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. சென்னை -- புதுச்சேரி பிரதான சாலையில் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி, பேருந்து என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள கடலோர மாவட்டங்களின் பிரதான சாலையாகவும் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற 'டெண்டர்' விடப்பட்டு, விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. மூன்று ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி, எல்லையம்மன் கோவில் பகுதி, கடப்பாக்கம் போன்ற பகுதிகளில் சாலை நடுவே பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால், இந்த சாலையை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.