சதுரங்கப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார மையம் இயங்குகிறது. இங்கு, புதுப்பட்டினம், வாயலுார், விட்டிலாபுரம், வெங்கப்பாக்கம், குன்னத்துார், மணமை உள்ளிட்ட பகுதியினர், காய்ச்சல், மகப்பேறு உள்ளிட்ட சிகிச்சை பெறுகின்றனர்.இதன் முக்கியத்துவம் கருதி, அணுசக்தி துறை நிறுவனங்கள், கட்டடம் மற்றும் மருத்துவ சாதனங்களை வழங்கியுள்ளன.மையத்தில், மகப்பேறு மருத்துவம் சிறந்த முறையில் அளிக்கப்படுவதால், சுற்றுப்புற பகுதியினர், மகப்பேறு ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போது, பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணியர் அதிகரித்து வரும் நிலையில், வளாகத்தில் உள்ள மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கம், ஓராண்டாக இயங்காமல் முடங்கியுள்ளது.அறுவை சிகிச்சை அரங்கம் பயன்படாமல் கிடப்பதால், சிக்கலான பிரசவத்துடன் வரும் நிறைமாத கர்ப்பிணியர், அறுவை சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.பாதுகாப்பான பிரசவம் கருதி, அறுவை சிகிச்சை அரங்கத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, மைய நிர்வாகத்தினர் கூறியதாவது:மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கை இயக்க, அதற்கேற்ற உயர் மின்திறன் மின் இணைப்பு இல்லை.கடந்த ஆண்டு ஜனவரியில், மகப்பேறு அறுவை சிகிச்சை நடந்தபோதே, மின்சார கோளாறால் மின்கம்பி தீப்பற்றியதால் தான், அரங்கை மூடிவிட்டோம்.மின் இணைப்பை பழுது பார்த்து, உயர் மின்திறன் இணைப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் என, பொதுப்பணித்துறையிடம் வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.