நிறுவனங்கம் பெயர் பலகை தமிழில் எழுத உத்தரவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என, நிறுவன அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ், நேற்று உத்தரவிட்டார்.செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, தொழிலாளர் உதவி கமிஷனர் சுதா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அசோக் மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். சமூக பொறுப்பு நிதியில் ரேஷன் கடைகள், பள்ளி கட்டடங்கள் மற்றும் ஏரிகள், குளங்கள் துார் வாரும் பணிகள் போன்றவை, புதிய பணிகளாக எடுக்க வேண்டும் என, தனியார் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.