மறைமலை நகர் : செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில், தடம் எண் '82சி' அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் உள்ள முக்கிய கிராமங்களில் மட்டும் நின்று செல்லும்.இந்நிலையில், நேற்று மதியம் செங்கல்பட்டில் இருந்து இந்த பேருந்தில் ஏறிய சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பயணியர், சேந்தமங்கலம் நிறுத்தத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளனர்.ஆனால், பேருந்து நடத்துனர், 'சேந்தமங்கலம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காது' என கூறியதால், கிராம மக்கள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அது மட்டுமின்றி, கிராம மக்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்து, சேந்தமங்கலம் பகுதியில் பேருந்து வந்தபோது, 20க்கும் மேற்பட்டோர் பேருந்தை சிறை பிடித்தனர்.சக பயணியர் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், கிராம மக்கள் பேருந்து செல்ல அனுமதித்தனர். அதன் பின் பேருந்து புறப்பட்டு சென்றது.சேந்தமங்கலம் கிராம மக்கள் கூறியதாவது:இந்த தடத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, '82சி' பேருந்து ஸ்ரீபெரும்புதுார் வரை இயக்கப்பட்டது. இந்த பேருந்து, பெரியார் நகர், தெள்ளிமேடு, ஆப்பூர் டேங்க், ஆப்பூர், சேந்தமங்கலம், வடக்குப்பட்டு கூட்டு சாலை உள்ளிட்ட பல கிராமங்களில் நின்று சென்றது.சில ஆண்டுகளாக, அனைத்து பேருந்து சேவைகளும் '82சி' எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளூர் வரை நீட்டிக்கப்பட்டது.அதில் இருந்து, பல கிராமங்களின் நிறுத்தங்களில் பேருந்து நிற்பதே இல்லை. ஆப்பூரில் மட்டுமே நிறுத்தப்படுகிறது.இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவியர், குறித்த நேரத்தில் செல்ல முடியாமலும், ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே, அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் அரசு பேருந்து நின்று செல்ல, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.