செம்மண் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து மனு
திருப்போரூர், கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் பெரிய ஏரியில் செம்மண் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து, ஒத்திவாக்கம் கிராம விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:ஒத்திவாக்கம் கிராமத்தில், புல எண் 51ல் உள்ள 23.15 ஹெக்டேர் பெரிய ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை நம்பி பெரிய ஒத்திவாக்கம், சின்ன ஒத்திவாக்கம், எடையர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் உள்ள விவசாயிகள், 250 ஏக்கர் நிலப்பரப்பில், இரண்டு போகம் பயிர் செய்து வருகின்றனர்.இந்த ஆண்டு ஏரி வற்றி உள்ளதால், இந்த நேரம் பார்த்து தனியார் குவாரி உரிமையாளர்கள், ஏரியில் செம்மண் எடுக்க திட்டமிட்டு, கிராமத்தில் உள்ள சிலரிடம் பேரம் பேசி வருகின்றனர்.ஏற்கனவே, குமிழி மற்றும் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் துார்வாருவதாக கூறி, 30 அடி ஆழம் மண் எடுத்ததால், ஆங்காங்கே மரண குழிகள் ஏற்பட்டு, மனித உயிர்கள் மற்றும் ஆடு, மாடுகள் விழுந்து பலியாகி உள்ளன.இதேபோன்று எழுந்த பிரச்னையால், 2017ம் ஆண்டு செம்மண் எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.எனவே, விவசாயிகளின் நலன் கருதி, ஒத்திவாக்கம் பெரிய ஏரியில் செம்மண் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.