| ADDED : ஜன 24, 2024 01:00 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 3வது வார்டு கிழக்கு பொத்தேரி மற்றும் வல்லாஞ்சேரி பகுதியில், நீர் வழித்தடங்களில் கட்டப்பட்டு இருந்த 200 வீடுகள் மற்றும் 23 கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று செங்கல்பட்டு பொதுப் பணித்துறை அதிகாரிகள், செங்கல்பட்டு தாசில்தார் தனலட்சுமி தலைமையில், ஆறு பொக்லைன் இயந்திரங்களுடன் சென்றனர்.கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு உடன் சென்றனர்.வீடுகளை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, முதற்கட்டமாக இந்த பகுதியில் கட்டப்பட்டு இருந்த 23 கடைகளை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.பொத்தேரி ஏரி கலங்கல் உபரி நீர் வெளியேறும் பகுதியில், வல்லாஞ்சேரி -- கிழக்கு பொத்தேரி சாலையில் கட்டப்பட்டு இருந்த கடைகள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன.அப்போது, அப்பகுதிவாசிகள், ''40 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம். மழைக்காலத்தில் இந்த பகுதியில் எப்போதுமே தண்ணீர் தேங்கியது இல்லை,'' என கூறினர்.இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் முறையாக முன்னரே நோட்டீஸ் வழங்கப்பட்டு, அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.சமீபத்தில் பொத்தேரி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் இருந்த வணிக கட்டடங்கள் அகற்றப்பட்டன. தற்போது, முதற்கட்டமாக இந்த பகுதியில் கடைகள் அகற்றப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.