| ADDED : ஜன 02, 2026 05:16 AM
கூவத்துார்:மழைநீர் வீணாவதை தடுக்க, குளத்தின் கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும் என, வடபட்டினம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். கூவத்துார் அடுத்துள்ள வடபட்டினம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடபட்டினத்தில் இருந்து காட்டுக்காலனி செல்லும் வழியில், கோவில் குளம் ஒன்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த குளத்தை துார்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டன. அதன் பின் முறையாக பராமரிக்காததால், தற்போது இக்குளத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. அத்துடன், குளத்தின் ஒரு பக்கம் கரை சரிந்து, தண்ணீர் மட்டத்திற்கு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் குளத்தில் மழைநீர் நிறைந்து, விரைவில் இந்த பக்கமாக தண்ணீர் வெளியேறி வீணாகிறது. குளத்தை துார்வாரி, கரையை உயர்த்தி பலப்படுத்தினால், மழைநீர் முழுமையாக குளத்தில் நிரம்புவதுடன், இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, குளத்தின் கரையை உயர்த்தி அமைக்க வேண்டுமென, வடபட்டினம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.