திருப்போரூர்:மாம்பாக்கத்தில் சாலை மீடியனில் நீண்டுள்ள கம்பியை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம்,கேளம்பாக்கம் - வண்டலுார் இடையே உள்ள மாம்பாக்கம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் படிக்கின்றனர். தவிர, தொழில் நிறுவனங்கள், வணிக கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. மாம்பாக்கம் வழியாக திருப்போரூர், -தாம்பரம், கொளத்துார்- மேடவாக்கம், புங்கேரி - தாம்பரம், கோவளம் -தாம்பரம், மாமல்லபுரம்- தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு தடத்தில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன. கடந்த ஆண்டு புயல் மழையின்போது மாம்பாக்கம், பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழை நீர் தேங்கியது. மழைநீரை வெளியேற்றுவதற்காக, தனியார் பள்ளி எதிரே சென்டர் சாலை மீடியனை உடைத்து மழைநீர் வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு உடைக்கப்பட்ட மீடியனை சீரமைக்கவில்லை. தற்போது, இந்த மீடியனில் இரும்பு கம்பி நீண்டு காணப்படுகிறது. இது சாலை குறுக்கே கடக்கும் பள்ளி மாணவர்கள், மக்கள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறுாக உள்ளது. எனவே, உடைக்கப்பட்டு, கம்பி நீண்டு உள்ள மீடியனை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.