பெருங்களத்துார், : பெருங்களத்துாரில் சாலையோரம் உள்ள கோவிலை இடம் மாற்றுவதில், அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.தென் மாவட்டங்களில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், சென்னை நகருக்குள் நுழையும் இடமாக பெருங்களத்துார் உள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் மற்றும் புறநகர் பகுதி வாகனங்களால், இந்த சாலை, 24 மணி நேரமும் கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது.சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், வார விடுமுறை, பண்டிகை நாட்களில், தங்களது சொந்த ஊருக்கு செல்லும் போதும், மீண்டும் சென்னைக்கு வரும் போதும், ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசலில் சிக்குவது வழக்கம்.பெருங்களத்துார் முதல் மகேந்திரா சிட்டி வரை, ஐ.டி., நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் பெருகிவிட்டதால், 24 மணி நேரமும், ஜி.எஸ்.டி., சாலை, 'பிசி'யாக காணப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, பெருங்களத்துார் முதல் மகேந்திரா சிட்டி வரை, ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஆனால், பெருங்களத்துாரில் இரணியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில், பல மீட்டர் துாரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.இரணியம்மன் கோவிலை, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, வண்டலுார் மக்கள், கிராம தேவதையாக வழிபட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதனால், கோவில் அமைந்துள்ள இடத்தில், நாள்தோறும் 'பீக் அவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இக்கோவில் அமைந்துள்ள இடத்தில், சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள அளவை, நெடுஞ்சாலைத் துறையினர் அளந்து, மார்க் செய்துள்ளனர்.அதே நேரத்தில், பின்புறத்தில் உள்ள தனியார் நிறுவனம், கோவிலை பின்புறம் நகற்றி வைக்க, 10.5 சென்ட் நிலத்தை, கோவில் பெயரில் செட்டில்மென்ட் தானமாக வழங்க முன்வந்துள்ளது.ஆனாலும், அதற்கான நடவடிக்கைகள் காலதாமதமாகி வருகின்றன. அதனால், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், இவ்விஷயத்தில் தீவிரம் காட்டி, தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை பெற்று, கோவிலை நகற்றி வைத்து, சாலை விரிவாக்கம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கோவிலுக்காக நிலம் வழங்க, பின்புறம் உள்ள தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கான, 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. விரைவில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, கோவிலை இடம் மாற்றும் பணி துவங்கும். அதன்பின், சாலை விரிவாக்கப்பணி துவக்கப்படும்.- ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள்
குரோம்பேட்டையில் தொடரும் நெரிசல்
குரோம்பேட்டையில், நிறுத்தத்திற்குள் செல்லாமல், சாலையிலேயே நிறுத்தப்படும் அரசு பேருந்துகளால், ஜி.எஸ்.டி., சாலையில், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தை நியூ காலனி, ராதா நகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பயன்டுத்துகின்றனர்.குறிப்பாக, மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தாம்பரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இங்கு நின்று செல்கின்றன.பேருந்துகள் நின்று, பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்ல நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பேருந்துகள் நிழற்குடைக்குள் சென்று, நின்று செல்கின்றன.ஆனால், சில பேருந்துகள் உள்ளே செல்லாமல், சாலையிலேயே நிறுத்தி பயணியரை ஏற்றிச் செல்கின்றன.குறிப்பாக, 'பீக் ஹவர்' நேரத்தில் பல பேருந்துகள், இப்படியே சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.மற்றொருபுறம், நிறுத்தத்திற்குள் காத்திருக்கும் பயணியர், பேருந்திற்காக ஓடி வருவதற்குள், அவை சென்று விடுகின்றன.அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு, சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்து, நிறுத்தத்திற்குள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.