சாலையோர ஆக்கிரமிப்புகள் தாம்பரம் பகுதியில் அகற்றம்
தாம்பரம்:தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் போன்று, மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையும் அதிக மக்கள் நடமாட்டம் கொண்டது. இச்சாலையை ஒட்டி, பெரிய வணிக நிறுவனங்கள் உட்பட நுாற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இதனால், 24 மணி நேரமும் நடமாட்டம் இருக்கும்.பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருக்கும். இச்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் சாலையோர கடைகளை வரைமுறைப்படுத்தியது.அதன்படி, பெரிய கடைகளின் நுழைவாயிலில் இருந்து, ஐந்து அடி வரை பயன்படுத்தலாம் என்றும், அதற்கு மேல் கடைகள் அமைக்கக்கூடாது என்றும் எச்சரித்து, எல்லை கோடும் போடப்பட்டது.அப்படியிருந்தும், எல்லை கோட்டை கடந்து, சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், வழக்கத்தை காட்டிலும் நெரிசல் பன்மடங்கு அதிகரித்து, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், சண்முகம் சாலை, மாநகராட்சி அலுவலகம் இயங்கும் முத்துரங்கம் முதலி, சிவசண்முகம் சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.சண்முகம் சாலையில், நுாலக வாசலை மறைத்து போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளையும், அதிகாரிகள் அகற்றினர். இந்த நடவடிக்கை, பெயருக்காக இல்லாமல் நிரந்தர நடவடிக்கையாக இருந்தால் மட்டுமே, சண்முகம் சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.