ரத்தினமங்கலம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
திருப்போரூர்:வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் மகன்கள் ஹரிகரன், 13, முகேஷ், 11. இவர்கள், கண்டிகை அரசு பள்ளியில், முறையே 8, 6ம் வகுப்புகள் படித்து வந்தனர்.நேற்று மாலை 3:00 மணிக்கு, சகோதரர்கள் இருவரும் வீட்டிலிருந்து ரத்தினமங்கலம் ஏரிக்கு குளிக்க சென்றனர். குளித்துக்கொண்டிருக்கும் போதே, முகேஷ் நீரில் மூழ்கினார். தம்பியை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டபடி, ஹரிகரன் ஏரியில் இறங்கியபோது, அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.இதை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஹரிகரன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், ஹரிகரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.