உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் குளத்தில் தொடர் உயிரிழப்பு பாதுகாவலர்கள் நியமிக்க கோரிக்கை

கோவில் குளத்தில் தொடர் உயிரிழப்பு பாதுகாவலர்கள் நியமிக்க கோரிக்கை

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது.இங்கு அறுபடை வீட்டிற்கு நிகரான, கந்தசுவாமி கோவில் உள்ளது. கந்த பெருமான் சுயம்பு மூர்த்தியாகவும், மும்மூர்த்தி அம்சமாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.மாதந்தோறும் பரணி கிருத்திகை, சஷ்டி, விசாகம் நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. இந்த கோவிலை ஒட்டி, சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது.பக்தர்கள் இக்குளத்தில் நீராடி, கந்தபெருமானை வழிபடுகின்றனர். கடந்த 400 ஆண்டுகளாக வற்றாத நிலையில் உள்ள இந்த திருக்குளம், இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.இக்குளத்தில் விழாக்களின் போது தெப்பல் விழா, தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், இந்த குளத்தில் நீராடி கந்தபெருமானை தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். குளத்தை சுற்றி சுதை சிற்பத்துடன், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.கடந்த 17, 19, 21 ஆகிய தேதிகளில், அடையாளம் தெரியாத ஆண் நபர்கள் மூவர், இக்குளத்தில் முழ்கி இறந்துள்ளனர்.இவர்களது உடல்களை திருப்போரூர் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வழக்கமாக இதற்கு முன் இக்குளத்தில் குடிபோதையிலும், நீச்சல் தெரியாமலும் சிலர் மூழ்கி இறந்துள்ளனர்.ஆனால், தற்போது அடுத்தடுத்து குளத்தில் மூவர் மூழ்கி இறந்தது, பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த கோவில் வளாக பகுதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் அதிகமாக தங்கி உள்ளனர். இவர்களை, கண்காணிக்க வேண்டியுள்ளது.அதனால் கோவில் நிர்வாகம், குளத்திற்கு அருகே வருவோரை கண்காணிக்க, பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், குளத்தில் உள்பகுதியில் சில பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் விடுபட்டுள்ளது. அந்த இடத்திலும் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்.அங்குள்ள மின் விளக்குகளை சரி செய்து, குளத்தின் படிக்கட்டில் உள்ள பாசியையும் அகற்ற வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை