மறைமலை நகர்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் கரும்பு விவசாயம் குறைந்து வருவதால், படாளத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை அளவு சரிந்துள்ளது. ஆண்டுதோறும் 3 லட்சம் டன் வரை இருந்த அரவை, தற்போது 2 லட்சத்திற்கும் குறைவாக சரிந்துள்ளதால், இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, படாளம் பகுதியில், 1960ல் அப்போதைய முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, இந்த ஒரு சர்க்கரை ஆலை மட்டுமே உள்ளது. இந்த ஆலை புதிதாக துவங்கப்பட்ட போது, இரு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் அதிக அளவில் ஆலைக்கு கரும்பு அளித்து, பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி அடைந்தனர். நல்ல முறையில் இயங்கி வந்த ஆலையின் சரிவு, 1994 - -95 காலகட்டத்தில் துவங்கியது. இந்த ஆலைக்கு உரிய சாகுபடி நிலங்களான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாத்தனஞ்சேரி பிர்காவுக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளை பிரித்து, சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்டது. தனியாருக்கு பிரித்துக் கொடுக்கும் முன், ஆண்டுக்கு 3 லட்சம் டன் முதல்- 3.5 லட்சம் டன் வரை, கரும்பு அரவை நடந்தது. படிப்படியாக குறைந்து, -2000ம் ஆண்டு படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது. விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம், கோரிக்கையை ஏற்று, 10 ஆண்டுகள் கழித்து 2010ம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால், சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையில், 2015ம் ஆண்டு, சங்கராபுரம் தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், தனியாருக்கு கொடுக்கப்பட்ட சாகுபடி நிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், மீண்டும் 2016ம் ஆண்டு முதல், படாளம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் நகரமயமாக்கல் காரணமாக, கரும்பு விவசாயம் குறைந்து வருகிறது. கரும்பு விவசாயிகள் நெல் உள்ளிட்ட மாற்று பயிர்களை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், 3 லட்சம் டன் அரைத்த ஆலைக்கு, தற்போது 2 லட்சம் டன் அரவைக்கு கரும்பு வருவது அபூர்வமாக உள்ளது. இதன் காரணமாக, அரசின் உத்தரவுடன் வெளி மாவட்டங்களில் இருந்து கரும்பு கொண்டுவரப்பட்டு, படாளம் சர்க்கரை ஆலையில் அரவை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு உட்பட்ட சாகுபடி நிலங்களில் தற்போது, 4,500 ஏக்கரில் மட்டுமே கரும்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 65,000 டன் அரவைக்கு வந்தது. இந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் கரும்பு அரவை துவங்க உள்ள நிலையில், வெளி மாவட்ட கரும்பு உட்பட, 85,000 டன் கரும்பு மட்டுமே பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது: உளுந்து, நெல் போன்றவை கரும்புக்கு போட்டி பயிர்களாக உள்ளன. செலவு குறைவு மற்றும் எளிதில் பணம் கைக்கு கிடைப்பதால், கரும்பு விவசாயிகள் மாற்று பயிர்களை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக கரும்பு வெட்டு கூலி, வண்டி வாடகை உள்ளிட்டவற்றை கணக்கிட்டால், கரும்பில் கிடைக்கும் லாபம் கட்டுப்படியாகாமல் உள்ளது. மேலும், கரும்புக்கான தொகையும், இரு தவணைகளாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை, மத்திய அரசு வழங்கும் கட்டுப்படியாகும் விலையான டன்னிற்கு 2,919 ரூபாய், ஆலையில் கரும்பு போட்டவுடன் ஒரு மாதத்தில் நேரடியாக, விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால், மாநில அரசின் ஊக்கத்தொகையாக, டன் ஒன்றுக்கு வழங்கப்படும் 195 ரூபாய், ஏழு மாதங்கள் வரை காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகை ஆண்டுதோறும் மாற்றம் அடையும். மேலும், கடந்த சில ஆண்டுகளாக பன்றித்தொல்லை அதிகரித்து உள்ளதால், கரும்பு பயிர்களை பெருமளவு நாசம் செய்கின்றன. மாவட்ட அளவில் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். தமிழகம் முழுதும் கரும்பு விவசாயம் தொடர்ந்து குறைந்து வருகின்றன. ஆலை சார்பில் கரும்பு வெட்டும் இயந்திரம் வழங்கப்பட்ட போதிலும், ஆட்கள் தேவைப்படுகின்றனர். கர்நாடக மாநிலத்தை போல நம் மாவட்டத்திலும், கூலி ஆட்களை நியமித்து கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். சமீபத்தில் தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான 'மொலாசஸ்' மூலப்பொருள், கர்நாடக மாநிலத்தில் இருந்து 'டேங்கர்' சரக்கு வசதி கொண்ட ரயில்களில் கொண்டு வரப்பட்டது. எனவே, இந்த படாளம் சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி எத்தனால் தயாரிப்பு போன்ற வசதிகள் கொண்டு வர வேண்டும். இதன் வாயிலாக பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கரும்பு சாகுபடியும் அதிகரிக்கும். -- எஸ்.தனபால், தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர், காஞ்சிபுரம் மாவட்டம்.
படாளம் ஆலைக்கு
உட்பட்ட
கோட்டங்கள்
செங்கல்பட்டு, உத்திரமேரூர், சீத்தனஞ்சேரி, படாளம், பவுஞ்சூர், மதுராந்தகம், மேல்மருவத்துார், திருக்கழுக்குன்றம், திண்டிவனம் உள்ளிட்ட ஒன்பது கோட்டங்களில், இருந்து துவக்கத்தில் இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் கொண்டுவரப்பட்டன. கடந்த 2010ம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் வானுார் கோட்டத்தில், இருந்து கரும்பு கொண்டுவரப்படுகிறது.