சென்னை :சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் பிரதானமானதாக சொத்துவரி மற்றும் தொழில் வரி உள்ளது. அரையாண்டு என்ற கணக்கில் ஆண்டுக்கு 1,700 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி எல்லையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர்.முறையாக சொத்து வரி செலுத்துவோருக்கு 2 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.அதேநேரம் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு தண்ட வட்டியுடன், 'நோட்டீஸ்' வழங்கப்படுகிறது. தொடர்ந்து அலட்சியப்படுத்தும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.நீண்ட காலமாக சொத்து வரி பாக்கி வைத்திருந்த சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு, மாநகராட்சி சமீபத்தில் நோட்டீஸ் வழங்கி சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நிலுவை வைத்திருந்த 100 பேர் பட்டியலை இணையதளத்திலும் மாநகராட்சி வெளியிட்டு, சொத்து வரி வசூலித்து வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023 கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த விதியில், இலவச சேவை வழங்காத அரசு அலுவலகங்களிலும், சொத்து வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.எனவே, சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள ரயில்வே அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக, சென்னையில் எவ்வளவு ரயில்வே அலுவலகங்கள் உள்ளன; குடியிருப்புகள் எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து, மாநகராட்சி நிதி மற்றும் வருவாய் கூடுதல் கமிஷனர் லலிதா கூறியதாவது:இந்த நிதியாண்டில் இதுவரை 1,510 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 1,700 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31க்குள், இலக்கின்படி சொத்து வரி வசூலிக்கப்படும்.தற்போது, ரயில்வே அலுவலகங்கள், குடியிருப்புகளில் சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, ரயில்வே துறையிடம் பேசி வருகிறோம். அதன் வாயிலாக, ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.அதேபோல் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இலவச சேவை வழங்கும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு சொத்துவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டு முடிய இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், நிலுவை வைத்திருக்கும் சொத்து உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்த முன்வர வேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.