இருள் சூழ்ந்த நெடுஞ்சாலை திருக்கச்சூரில் வழிப்பறி அச்சம்
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ---- ஸ்ரீபெரும்புதுார் சாலை 25 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலையை திருக்கச்சூர், தெள்ளிமேடு கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த சாலையில் சென்று வருகின்றன.இந்த சாலையில் சிங்கபெருமாள் கோவில், ரயில்வே கேட் - -திருக்கச்சூர் பெட்ரோல் பங்க் வரை, 1 கி.மீ., துாரம் வரை சாலையில், மின் விளக்குகள் எரியாமல் பழுதடைந்து உள்ளன. இதனால், இரவு நேரங்களில் இந்த பகுதியில் பெண்கள் அச்சத்துடன் சென்று, வருகின்றனர். இது குறித்து திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த ஜனனி, 25 என்ற பெண் கூறியதாவது:திருக்கச்சூர், தெள்ளிமேடுபெரியார் நகர்,கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பகுதிகளுக்கு வேலைக்கு சென்று திரும்புகின்றனர்.பெரும்பாலானோர் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து தங்களின் பகுதிகளுக்கு துாரம் குறைவு என்பதால், நடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் காட்சி பொருளாகவே உள்ளன. இதன் காரணமாக இந்த பகுதி இருள் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கடந்து சென்று திரும்ப, அச்சமாக உள்ளது. அடிக்கடி மொபைல் போன் பறிப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. யாரோ பின் தொடர்வது போன்ற அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், இந்த பகுதியில் மின் விளக்குகளை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.