| ADDED : மார் 09, 2024 10:47 PM
திருப்போரூர்:திருப்போரூர் -- செங்கல்பட்டு இடையே, 27 கி.மீ., தொலைவு உள்ளது. இவற்றிற்கு இடையே மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், வளர்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இந்நிலையில், தற்போது 113 கோடி ரூபாய் மதிப்பில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் ரயில் தடத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், இத்தடத்தில் மாநகர பேருந்து இயக்கப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு வரை, பல கோடி ரூபாய் செலவு செய்து சாலையை மேம்படுத்தியும், மாநகர பேருந்து இயக்கப்படவில்லை.இரு முக்கிய பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், பணியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலன் கருதி, இத்தடத்தில் மாநகர பேருந்து சேவையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.