எல்லையம்மன் கோவில் சாலை சந்திப்பில் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
செய்யூர்: எல்லையம்மன் கோவில் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க, தடுப்பு அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மேல்மருவத்துார் செல்லும் நெடுஞ்சாலையின் முக்கிய சாலை சந்திப்பு உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி,பேருந்து என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில், விபத்து ஏற்படுவதை தடுக்க கிழக்கு கடற்கரை சாலையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளதால், மேல்மருவத்துார் சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க, அதிகாரிகள் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.