வளசரவாக்கம், போரூர் - கோடம்பாக்கம் வரையிலான ஆற்காடு சாலையை, 100 அடி அகலமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் பணி நடப்பதால், நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே எடுத்த நில அளவீடுபடி, மெட்ரோ பணிகளுடன் சேர்த்து கட்டடங்களை இடித்து, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்று ஆற்காடு சாலை. குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, போரூர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது.இச்சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மொத்தமுள்ள 8 கி.மீ., துார சாலையில் ஆங்காங்கே, 4 கி.மீ., துாரம் மிகவும் குறுகலாக இருந்தது.அதாவது, போரூர் - வளசரவாக்கம் சாலை 30 அடியாகவும், விருகம்பாக்கம் - வடபழனி இடையே, 55 முதல் 60 அடி அகலத்திலும் உள்ளது. இதுபோல், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் உள்ளது.இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. காலை, மாலை, 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரம் மட்டுமின்றி, நாள் முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதில், போரூர் முதல் வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகர் வரையிலான சாலை, நெடுஞ்சாலை துறை பராமரிப்பிலும், ஆழ்வார்திருநகர் முதல் கோடம்பாக்கம் வரை உள்ள ஆற்காடு சாலை, மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், முக்கிய சாலைகளை அகலப்படுத்த, சென்னை மாநகராட்சிக்கு, இரண்டாவது முழுமை திட்டத்தின் கீழ், 2008ல் சி.எம்.டி.ஏ., பரிந்துரை வழங்கியது.அதன்படி முதற்கட்டமாக, காளியம்மன் கோவில் சாலை, ஆற்காடு சாலை, சர்தார் படேல் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட 14 சாலைகளையும், இரண்டாம் கட்டமாக 10 சாலைகளையும் தேர்வு செய்து, அவற்றை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்தது.இதில், போரூர் முதல் ஆழ்வார் திருநகர் வரையிலான ஆற்காடு சாலையை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை சார்பில் நில அளவீடு முடிந்து, அகற்றப்படும் கட்டடங்களில் குறியீடு செய்யப்பட்டது.சாலை விரிவாக்க பணி துவங்கும் நேரத்தில், அச்சாலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டதோடு, அச்சாலையை மெட்ரோ நிர்வாகத்திடம், நெடுஞ்சாலைத் துறை ஒப்படைத்தது.நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள இச்சாலை, 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே அகலத்தில் தற்போதும் இருப்பதால், வாகன பெருக்கத்திற்கு ஏற்ப தாக்குப்பிடிக்க முடியமால் நெரிசல் அதிகரித்துள்ளது. சாதாரண துாறலுக்கு கூட, இச்சாலை வாகன நெரிசலால் ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் கூறியதாவது:மெட்ரோ ரயில் நிர்வாகம், ஆற்காடு சாலையோர கட்டடங்களை இடித்து, ரயில் பாதை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இடிக்கப்பட்ட கட்டடங்களை சீர்செய்யும் பணியில், அவற்றின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதனால், மெட்ரோ ரயில் பணி முடிக்கும் முன்னரே, ஆற்காடு சாலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்திய, நெடுஞ்சாலைத் துறையினரால் குறிக்கப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்றினால், 100 அடி அகல இடைவெளி கிடைக்கும். மெட்ரோ ரயில் பணி முடிந்ததும், 100 அடி அகல சாலையாக விரிவாக்க பணி மேற்கொள்வது எளிதாகும். இல்லையென்றால், மெட்ரோ பணி முடிந்து, அதற்கு பின் மீண்டும் நில அளவீடு, சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.தவிர, மெட்ரோ பணி முடிந்ததும் மழைநீர் வடிகால் பணியை, அதன் நிர்வாகம் மேற்கொள்ளும். அப்பணியை முடித்தபின்னரே, நெடுஞ்சாலைத் துறையிடம் மெட்ரோ நிர்வாகம், ஆற்காடு சாலையை ஒப்படைக்கும்.அதற்கு பிறகே, சாலை விரிவாக்க பணி துவங்கும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலை வரும் போது, வடிகாலை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். விரிவாக்கத்திற்கு பின் மீண்டும் வடிகாலை புதிதாக கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.சாலை விரிவாக்க சமயத்தில் மழைநீர் செல்ல வழியின்றி, அப்பகுதி குடியிருப்புகள், சாலைகள் உள்ளிட்டவை மூழ்கி, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதனால், நேர விரயம், மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை உள்ளது.எனவே, இப்பகுதியில் நிலவும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டும், எதிர்கால தேவையை கருதியும், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து, ஆற்காடு சாலை விரிவாக்க பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆலோசனை செய்கிறோம்போரூர் பாய்கடை முதல் வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் வரை உள்ள ஆற்காடு சாலை, திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை வசம் இருந்தது. சில மாதங்களுக்கு முன்தான், சென்னை வட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆற்காடு சாலையில் 100 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய, சர்வே செய்த இடம் வரை எடுக்க வேண்டும் என, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து இரு துறையும் கலந்தாலோசித்து வருகிறோம்.- நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்சென்னை பெருநகர் பகுதியில் பேருந்துகள் செல்லும் நிலையில் உள்ள சாலைகளுக்கான அகலம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த வகையில், சாலைகளை விரிவாக்க வேண்டியது நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சியின் பொறுப்பு. சிறப்பு திட்டங்கள் அடிப்படையில், சில இடங்களில் மட்டுமே சாலை விரிவாக்க திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்து வருகிறது.-- சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள்.
அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கல்
மெட்ரோ ரயில் நிர்வாகம், தங்கள் பணிக்கு தேவைப்படும் அகலத்திற்கு மட்டுமே நிலத்தை கையகப்படுத்தி, பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலையின் நடுவே 7 அடி அகலத்திற்கு மெட்ரோ ரயில் துாண்கள், துாண்களின் இரு புறமும் 23 அடி அகல சாலை மற்றும் இருபுறமும் 5 அடி நடைபாதை அமைக்கிறது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தால் ஆற்காடு சாலை 62 அடி அகல சாலையாக இருக்கும். இதை நுாறடி சாலையாக்க, 38 அடியை புதிதாக அளவீடு செய்து அகற்ற காலதாமதம் ஏற்படும். தவிர, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாகன பெருக்கம் மீண்டும் அதிகரித்து, இச்சாலையில் நெரிசல் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.