திருவான்மியூர், சென்னை, திருவான்மியூர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 40; கார்பென்டர். இவரது மனைவி தீபா, 38. இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தீபா மூன்று ஆண்டுகளாக, அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.தீபாவின் தாய் பொன்னி, 58. இவர் மகளுடன் செல்லாமல் மருமகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற அய்யப்பன், மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, சமையலறையில் பொன்னி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.அதிர்ச்சியடைந்த அய்யப்பன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொன்னியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரித்தனர்.இதில், பொன்னியை கொலை செய்தது, அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 17 வயது சிறுவன், அவரது நண்பர்களான பெசன்ட் நகரைச் சேர்ந்த விக்னேஷ், 20, திருவான்மியூரைச் சேர்ந்த தினகரன், 21, ஆகியோர் என்பது தெரியவந்தது.அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.இதில், சிறுவன் தன் பெற்றோர் கூலி வேலைக்கு செல்லும்போது, அவரது நண்பர்களை வீட்டில் வரவைத்து மது அருந்துவதும், கஞ்சா புகைப்பதும், பெண்களுடன் உல்லாசமாகவும் இருந்து வந்து உள்ளான். ஒருநாள் இதை பொன்னி பார்த்துள்ளார்.இது குறித்து சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்து, கண்டிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.இந்த ஆத்திரத்தில் இருந்த சிறுவன், பொன்னியின் மருமகன் வேலைக்கு சென்ற நேரத்தில், நண்பர்களுடன் சேர்ந்து பொன்னியை தள்ளிவிட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.