சென்னை, எம்.ஜி.எம்., மருத்துவமனையில், 30 மணி நேரத்தில் ஐந்து பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்துள்ளனர்.இதுகுறித்து, மருத்துவமனையின் இதயம் -நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குனர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், இணை இயக்குனர் கே.ஜி.சுரேஷ் ராவ் ஆகியோர் கூறியதாவது:உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள், தமிழகத்தில் மேம்பட்டு வருகிறது. முன்பை விட, தற்போது அதிநவீன நுட்பத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, புதிய சாதனைகள் படைக்கப்படுகிறது. எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், மே 25ம் தேதி 60 வயதான ஒருவருக்கும், 50 வயதான ஒருவருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சைகள் குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டன. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்தும், மற்றொரு தனியார் மருத்துவமனையில் இருந்தும் இருவேறு இதயம் தானமாக பெறப்பட்டு, அவர்களுக்கு பொருத்தப்பட்டன. அதேபோல், 67 வயதான முதியவர் ஒருவருக்கும், இரட்டை நுரையீரல்கள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, 40, 50 வயதான நபர்களுக்கு, சென்னை மற்றும் கோவையில் இருந்து தானமாக பெறப்பட்ட இதயங்களை, 26ம் தேதி அடுத்தடுத்து சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தி, மறுவாழ்வு அளிக்கப்பட்டது. அதன்படி, 30 மணி நேரத்திற்குள், நான்கு இதயம், ஒருவருக்கு இரட்டை நுரையீரல்களை எங்களது மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.