திருமங்கலம், கோயம்பேடு பகுதியில் வசிப்பவர் விஜயகுமார், 35; வழக்கறிஞர். இவர், மேற்கு அண்ணா நகர், 14வது தெருவில் அலுவலகம் வைத்துள்ளார்.இவரது அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை, அடையாளம் தெரியாத ஒன்பது பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர், அங்கிருந்த ஜூனியர் வழக்கறிஞரான கார்த்திக் என்பவரிடம், விஜயகுமார் குறித்து மிரட்டல் தொனியில் விசாரித்துள்ளார்.அப்போது, அலுவலகத்திற்குள் வந்த விஜயகுமாரிடம், 'அண்ணன் லைனில் இருக்கிறார் பேசு' என மிரட்டி, அந்த நபர் மொபைல்போனை கொடுத்துள்ளார்.அதில், எதிர் முனையில் பேசியவர், தான் சோழவரம் ரவுடி சேதுபதி என்றும், பணம் கொடுக்கும்படியும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விஜயகுமார், திருமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த ஒன்பது பேரையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.விசாரணையில் ஒருவர், சோழவரம் ரவுடி சேதுபதியின் கூட்டாளியான, நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ், 22, என தெரிந்தது.விக்னேஷுடன் இருந்த எட்டு பேரும், மதுரவாயலில் உள்ள பிரபல தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., பயிலும் மாணவர்கள் என்பதும் தெரிந்தது.இவர்களுக்கு போதை ஏற்றிவிட்டு, கூலிப்படை கும்பலாக ரவுடி விக்னேஷ் பயன்படுத்தி வந்துள்ளார்.நேற்று முன்தினம் விக்னேஷுக்கு பிறந்தநாள் என்பதால், கல்லுாரி மாணவர்களுடன் சென்று, கஞ்சா போதையில் வழக்கறிஞரிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து நேற்று காலை, ரவுடி விக்னேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரையும், திருமங்கலம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சோழவரம் ரவுடி சேதுபதியை தேடி வருகின்றனர்.