சென்னை, சென்னையில், ஒரு காலத்தில் அண்ணா சாலையில் எல்.ஐ.சி., நிறுவனத்தின், 14 மாடி கட்டடம் தான், மிக உயர்ந்த கட்டடமாக பார்க்கப்பட்டது. இதன் பின், 2008ல், கட்டடங்களுக்கான உயர கட்டுப்பாடுகளை சி.எம்.டி.ஏ., தளர்த்தியது.இதன் காரணமாக, சாலை அகலம், மனையின் முகப்பு அகலம் அடிப்படையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, விமான போக்குவரத்து துறை, தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று இருந்தால் போதும், என்ற நிலை ஏற்பட்டது.இதனால், காலப்போக்கில் பழைய மாமல்லபுரம் சாலை, ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில், 30 முதல் 35 மாடி கட்டடங்கள் கட்டி எழுப்பப்பட்டன.இருப்பினும், விமான போக்குவரத்து துறை தடையின்மை சான்று கிடைக்காது என்பதால், சென்னைக்குள் உயரமான கட்டடங்கள் வராமல் இருந்தது. ஆனால், தற்போது, பெரம்பூரில் ஒரு நிறுவனம், 40 மாடி குடியிருப்பு கட்டடம் கட்டி வருகிறது. இதே போல, தண்டையார்பேட்டையில் 27 மாடி குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா சாலையில் 16 முதல் 19 மாடி வரையிலான கட்டடங்கள் வெவ்வேறு நிறுவனங்களால் கட்டப்படுகின்றன.இதில், சென்னை அண்ணா சாலையின் அடையாள சின்னமாக இருந்த 'டி.வி.எஸ்., சுந்தரம் மோட்டார்ஸ்' நிறுவனம் செயல்பட்ட வளாகம், சமீபத்தில் இடிக்கப்பட்டது. இங்குள்ள, 5 ஏக்கர் நிலத்தை மறு மேம்பாடு செய்யும் பொறுப்பை பெங்களூரைச் சேர்ந்த 'பிரிகேட்' நிறுவனம் ஏற்றுள்ளது. அண்ணா சாலையில் துவங்கி ஒயிட்ஸ் சாலை வரை பரவியுள்ள 5 ஏக்கர் நிலத்தில், பிரமாண்டமான கட்டுமான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இதில், அண்ணாசாலையை ஒட்டிய பகுதியில், 18 மாடி அலுவலக மற்றும் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சில்லரை விற்பனைக்கான வளாகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது. இந்த வளாகத்தின் பின்பகுதியில், ஒயிட்ஸ் சாலையை ஒட்டிய பாகத்தில், 38 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆடம்பர வசதிகளுடன், 200 வீடுகள் இருக்கும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாசாலை, ஒயிட்ஸ் சாலை ஆகியவற்றின் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதால், புதிய அடுக்குமாடி திட்டத்துக்கு அதிகபட்ச தளபரப்பு குறியீடான எப்.எஸ்.ஐ., பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.