உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினாவில் பார்க்கிங் கட்டணம் தனியார் நிறுவனம் வசூலிக்க தடை

மெரினாவில் பார்க்கிங் கட்டணம் தனியார் நிறுவனம் வசூலிக்க தடை

சென்னை, சுற்றுலா தலமான சென்னை மெரினா கடற்கரைக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் வந்து செல்கின்றனர்.இப்படி வருவோரின் வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்த,'பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' என்ற பெயரில், சென்னை மாநகராட்சி சார்பில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றை பராமரிக்க தனியார் நிறுவனத்துடன், சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் நிலையில், தனியார் நிறுவனம் தொடர்ந்து பார்க்கிங் கட்டணம் வசூலித்து வந்தது.ஒப்பந்த காலத்தில் 'பைக்'குகளுக்கு 15 ரூபாயும், கார் போன்ற வாகனங்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்க மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இதற்கான அறிவிப்பு பலகை மெரினாவில் எங்கும் இல்லை.தனியார் ஒப்பந்த ஊழியர்கள் பைக்குகளுக்கு கூடுதல் கட்டணமாக 30 ரூபாயும், கார் போன்ற வாகனங்களுக்கு 60 ரூபாய், வேன், பேருந்து போன்ற வாகனங்களுக்கு 100 ரூபாயும் வசூல் செய்துள்ளனர். இதையடுத்து, தனியார் ஒப்பந்த ஊழியர்கள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க, மாநகராட்சி தடை விதித்துள்ளது.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மெரினா கடற்கரையில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனி, அவர்கள் அங்கு கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ