| ADDED : ஜூலை 08, 2024 01:08 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்குகிறார். வரும் 21ல் துவக்கி, செப்டம்பர் மாதம் 18ம் தேதி வரை, ஓரிக்கை, மஹா பெரியவர் மணிமண்டபத்தில் கடைப்பிடிக்க இருக்கிறார்.சாதுர்மாஸ்ய விரதம் என்பது ஆடி மாத பவுர்ணமி முதல், கார்த்திகை மாத பவுர்ணமி வரை என, தொடர்ந்து நான்கு மாதங்கள் கடைப்பிடிக்கக் கூடிய சக்தி மிக்க விரதங்களில் ஒன்றாகும்.இவ்விரத நாட்களின் போது, திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீசுவரருக்கு சிறப்பு பூஜை, உலக நன்மைக்காக சதுர்வேத பாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடக்க உள்ளன.வரும் 27ம் தேதி, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90வது ஜெயந்தி மகோற்சவமும், ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபத்தில் நடக்க உள்ளது என, காஞ்சி சங்கர மடம் தெரிவித்து உள்ளது.