சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து துவங்குகிறது. ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து, டைடல் பார்க் சந்திப்பு வரை, 2 கி.மீ., துாரம் உடையது. இங்கு, போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில், இந்திரா நகர் சந்திப்பில், 'யு' வடிவ மேம்பாலம் கட்டி, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. டைடல்பார்க் மேம்பாலம், இம்மாதம் இறுதியில் திறக்கப்பட உள்ளது.மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், சர்தார் பட்டேல் சாலை - ஓ.எம்.ஆரை இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில், 'எல்' வடிவ மேம்பாலம் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. மொத்தம் 85 கோடி ரூபாயில், 60 கோடி ரூபாய் மேம்பாலத்திற்கும், 25 கோடி ரூபாய் நிலம் கையகப்படுத்தவும் ஒதுக்கப்பட்டு உள்ளது.அடையாறு நோக்கி செல்லும் சாலையில், கேன்சர் மருத்துவமனை மேம்பாலம் முடியும் இடத்தில், 650 அடி துாரத்தில் இருந்து, 'எல்' வடிவ மேம்பாலம் துவங்குகிறது. மொத்தம், 2,130 அடி நீளம், 26 அடி அகலத்தில் மேம்பாலம் அமைகிறது.தற்போது, சர்தார் பட்டேல் சாலை, 75 அடி அகலத்தில் உள்ளது. இதை, 110 அடி அகலமாக மாற்றப்பட உள்ளது. இதற்கு, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எனும் சி.எல்.ஆர்.ஐ., சார்பில் இடம் வழங்கப்பட்டு உள்ளது.அங்கு, விரிவாக்கம் செய்து, நடைபாதையுடன் வடிகால் மற்றும் 12 அடி உயரத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இந்த பணி முடியும் தருவாயில் உள்ளது.தற்போது, கிண்டி நோக்கிய திசையில், 300 மீட்டர் நீளம், 20 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. இதில், 13 கட்டடங்கள் உள்ளன.ஒரு மாதத்தில் நிலத்தை கையகப்படுத்தி, சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்பின், சர்தார் பட்டேல் சாலையின் மையப்பகுதியில் துாண் அமைக்கும் பணி துவங்க உள்ளது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மேம்பாலத்திற்கு, மொத்தம் 18 துாண்கள் வருகின்றன. பாலத்தின் மையப்பகுதி 26 அடி உயரம் உடையது. அடையாறு நோக்கிய திசையில், இருவழி பாதையாக அமையும். இதற்கான விரிவாக்கம் முடிந்தது.கிண்டி நோக்கிய திசையில், மூன்று வழிப்பாதையாக அமைகிறது. இதற்கு, நிலம் கையகப்படுத்தப்படுகிறது. ஓ.எம்.ஆரில் ஏழு துாண்கள் கட்டும் பணி நடக்கிறது. மீதமுள்ள துாண்கள், நிலங்களை கையகப்படுத்தி, சாலை விரிவாக்கம் செய்தபின் துவங்கப்படும்.இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பாலத்தை திறக்கும் வகையில், பணியை வேகப்படுத்தி உள்ளோம். பின், மத்திய கைலாஷ் மற்றும் கேன்சர் மருத்துவமனை மேம்பாலத்தில் நெரிசல் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.