-அம்பத்துார், , இரண்டு ஆண்டை கடந்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காததால், மனுதாரருக்கு இழப்பீடு வழங்க, தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை அம்பத்துார், வெங்கடாபுரம், எம்.டி.எச்., சாலையை சேர்ந்தவர் பி.ரமேஷ், 54. அவர், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005, பிரிவு 6(1) கீழ், மாதவரம் தாலுகா தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு, 2022, பிப்., 8ல், இரண்டு மனுக்கள் கொடுத்தார். அதில், மாதவரம் தாலுகா, சூரப்பட்டு கிராமத்தில், மேய்க்கால் வகைப்பாடு கொண்ட அரசு நிலத்தை, தனியார் சிலர் வீட்டு மனையாக பிரித்து விற்பதை தடுத்து, அந்த நிலத்தை மீட்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.மேலும், தனது மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, ஐந்து கேள்விகளை எழுப்பி தகவல் கேட்டார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும், தனது மனுக்கள் குறித்து எந்த தகவலும் தனக்கு வழங்கப்படவில்லை என, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். இது குறித்து கடந்த, 7ம் தேதி, தகவல் ஆணையர் தாமரைக்கண்ணன் விசாரித்தார். பொது தகவல் அலுவலருக்கு அவர் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் இரண்டு மனுக்களில் கோரிய தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு, 7(6)ன் படி, கட்டணமின்றி, ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில், அவருக்கு அனுப்ப வேண்டும். அதை, அவர் பெற்றுக்கொண்டதை உறுதி செய்து, தகவலின் நகலை இணைத்து அறிக்கையாக, அடுத்த மாதம் 3ம் தேதி, ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டை கடந்து இது வரை, தகவல் அறியும் உரிமை சட்டப்படி தகவல் அளிக்காமல், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, இரண்டு மனுக்களுக்கும், தலா 2,500 ரூபாயை இழப்பீடாக மனுதாரருக்கு, பொது அதிகார அமைப்பு வழங்கி, மனுதாரர் பெற்றுக்கொண்ட விவரத்தை, 3ம் தேதி ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அவருக்கு, தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர்கள் யார் என்பதை, சென்னை வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து, அந்த அலுவலருக்கு, 'ஏன், 25,000 ரூபாய் அபராதம் விதிக்க கூடாது.அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள, அவரது உயரதிகாரிக்கு ஏன் பரிந்துரைக்க கூடாது' என்பதற்கான விளக்கத்தை பெற்று, 3ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.