| ADDED : ஏப் 28, 2024 01:09 AM
ஆவடி:சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில், நான்கு நடைமேடைகள் மற்றும் ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. ஆவடி மார்க்கமாக, தினமும் 285 மின்சார ரயில்கள் மற்றும் 5 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.மக்கள் ஒன்றாவது நடைமேடையில் இருந்து மற்ற நடைமேடைகளை, விபத்து அபாயத்தில் கடந்து வந்தனர். வயதானோர், கர்ப்பிணியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்பட்டனர். இதற்கிடையில், நான்கு நடைமேடைகளையும் இணைக்கும் விதமாக, 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நடைமேடையில், 50 அடி உயரத்துக்கு, தலா 46 படிக்கட்டுகளுடன் புது நடை மேம்பாலம், கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.அதிக உயரம் காரணமாக, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எவரும் நடைமேம்பாலத்தை பயன்படுத்தவில்லை. மீண்டும் தண்டவாளத்தை கடந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. இதனால், அடிக்கடி விபத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டன.இந்நிலையில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் படிக்கட்டுகள் அமைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கின. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.