மணலிபுதுநகர்,மணலிபுதுநகர் அடுத்த விச்சூர் - செம்பிய மணலி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 42. மணலி மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தார். இவரது மனைவி இந்துமதி.தம்பதிக்கு லோகேஷ், 17, யோகேஷ், 10, என, இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து விட்டு, கதிர்வேல் தன் டூ - வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.ஈச்சங்குழி - விச்சூர் பிரதான சாலையில் செல்லும்போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், கீழே விழுந்த கதிர்வேல் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதைப் பார்த்த லாரி ஓட்டுனர், பயத்தில் இறங்கி ஓடிவிட்டார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கதிர்வேல் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், மணலி புதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.அப்போது, விச்சூர் சாலையில், கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரினர்.பின், போலீசார் சமாதானத்தை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். அடையாளம் தெரியவில்லை வண்டலுார்-- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அருகே ஆரம்பாக்கம் பகுதியை கடந்து சென்ற 'பஜாஜ் பல்சர் பைக்' மீது பின்னால் வந்த லாரி நேற்று மோதியது.இதில், பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத நபர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.