சென்னை:சென்னை, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் விஜயா, 70. இவரது மகள் லோகநாயகி, 51; இருவரும் சித்தாள். மூதாட்டி விஜயா 17ம் தேதி மாயமானார். இது குறித்து, எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரித்தனர்.மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும், விருதுநகரைச் சேர்ந்த பார்த்திபன், 32, அவரது மனைவி சங்கீதா, 28, ஆகியோரும் மூதாட்டியை தேடி வந்தனர். அப்போது, பார்த்திபன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட, மூதாட்டியின் மருமகன் குணசேகரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.போலீசாரின் பார்வை தங்கள் பக்கம் திரும்பியதை அறிந்த தம்பதி, 7 வயது குழந்தையுடன் தலைமறைவாகினர். கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள், பார்த்திபன் மீதான சந்தேகத்தை உறுதி செய்யும்படியாக இருந்தது.இதையடுத்து, தனிப்படை போலீசார் மொபைல் போன் எண்ணை வைத்து, விருதுநகரில் பதுங்கிய தம்பதியை பிடித்து விசாரித்தனர். அப்போது, நகை, பணத்திற்காக மூதாட்டியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.போலீசாரிடம் பார்த்திபன் அளித்துள்ள வாக்குமூலம்:நான் உணவு வினியோகம் செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தேன். குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்துவது சிரமமாக இருந்தது. கடந்த 17ம் தேதி வீட்டில் தனியாக இருந்த விஜயாவிடம் கடன் கேட்டோம். அப்போது ஏற்கனவே வாங்கிய 5,000 ரூபாயை தாருங்கள் என, கோபப்பட்டார். உடனே நான், அவரது சுருக்கு பணப்பையை பிடுங்கினேன். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் காலால் எட்டி உதைத்தேன். அவர் சத்தம் போடவும், சங்கீதா வாயை பொத்திக்கொள்ள, கழுத்தில் காலால் மிதித்து கொன்றோம்.பின், 2 சவரன் நகை, 20,000 ரூபாயை திருடினோம். உடலை எங்கள்வீட்டிற்குள் பதுக்கினோம். 18ம் தேதி அதிகாலையில், சங்கீதாவும் நானும் உடலை மூட்டையாக கட்டி இரு சக்கரவாகனத்தில் ஏற்றிச்சென்று, சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில், பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் வீசினோம்.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து, தம்பதி அடையாளம் காட்டிய இடத்தில் வீசப்பட்ட விஜயாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.