சென்னை:குடும்பத் தகராறில், 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிச்சென்ற தந்தையை, போலீசார் தேடுகின்றனர்.சென்னை, போரூர் ஏரியின் குறுக்கே, தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் உயர்மட்ட பாலம் உள்ளது. நேற்று மாலை, பாலத்தின் மீது பைக்கில் ஒருவர் வந்தார். பைக்கை நிறுத்திய அவர், டேங்கில் அமர்ந்திருந்த சிறுவனை துாக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் போரூர் ஏரியில் துாக்கி வீசி, அங்கிருந்து தப்பினார்.அவ்வழியே வந்த வாகன ஓட்டி ஒருவர், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, ஏரியில் குதித்து நீச்சலடித்து சிறுவனை பத்திரமாக மீட்டார். பின், அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தோரிடம் சிறுவனை ஒப்படைத்து சென்றுவிட்டார்.மீன் பிடித்தவர்கள் அளித்த தகவலையடுத்து, போரூர் போலீசார் வந்து சிறுவனை மீட்டு விசாரித்தனர். இதுகுறித்து போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.அப்போது, தலைமை செயலக காவல் நிலைய எல்லையில் குழந்தை ஒன்று மாயமானதாக புகார் வந்துள்ளது தெரிந்தது.இதையடுத்து நடந்த விசாரணையில், தலைமை செயலக காலனியைச் சேர்ந்த மோகன்ராஜ், 35, என்பவர், தன் மனைவி பிரியா, 28, என்பவருடன் ஏற்பட்ட சண்டையில், கோபத்தில் 3 வயது மகன் தர்ஷனை வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. மோகன்ராஜுக்கு, சில மாதங்களாக மனநலம் பாதிப்பு இருப்பதாகவும், அவரது மனைவி பிரியா தெரிவித்தார்.இதையடுத்து, குழந்தையை ஏரியில் வீசிச் சென்றது, குழந்தையின் தந்தை மோகன்ராஜ் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து, தலைமை செயலக போலீசார் வழக்கு பதிவு செய்து, தாய் பிரியாவிடம் மகன் தர்ஷனை ஒப்படைத்தனர். மகனை ஏரியில் வீசிச்சென்ற தந்தையை தேடுகின்றனர்.