உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர் மேம்பால பணி தொடர அனுமதி

தி.நகர் மேம்பால பணி தொடர அனுமதி

தி.நகர், :தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, புதிய மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. கடந்த 2023 மார்ச்சில் பணிகள் துவக்கப்பட்டன.தி.நகர், துரைசாமி சாலை -- உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக, அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.இந்த மேம்பாலம் 131 கோடி ரூபாய் மதிப்பில், 50 துாண்களுடன், 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதையாக அமைகிறது. இதில் மூன்றாம்கட்டமாக, பர்கிட் சாலை சந்திப்பில் இருந்து பழைய உஸ்மான் சாலை மேம்பாலம் வரை, 420 மீ.,க்கு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பணியை முடித்து, இந்தாண்டு தீபாவளிக்கு முன் மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு, சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரிடம் அனுமதி கேட்டு, கடந்தாண்டு டிசம்பரில், மாநகராட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்ட நிலையில், அனுமதி கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டது.நம் நாளிதழில் செய்தி வெளியானது. போக்குவரத்து காவல் துறை சார்பில், மேம்பாலத்தை தகர்க்க அனுமதி வழங்கப்பட்டு, ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்

சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து, தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள், பனகல் பூங்கா அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதுஇவ்வாகனங்கள், மேம்பாலத்தின் அணுகு சாலை வழியாக சென்று, பிரகாசம் சாலை - பாஷ்யம் சாலை - தியாகராய சாலை - பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையம் செல்லலாம் பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு, பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள், மூப்பாரப்பன் தெரு - மூசா தெரு - தெற்கு தண்டபானி தெரு, மன்னர் தெரு வழியாக உஸ்மான் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையம் செல்லலாம் தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணாசாலையை அடைய, தெற்கு உஸ்மான் சாலை சென்று, கண்ணம்மாபேட்டை அடைந்து, தென்மேற்கு போக் சாலையில் சென்று, சி.ஐ.டி., நகர், 4 மற்றும் 3வது பிரதான சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம் சி.ஐ.டி., நகர், 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாக சென்று, நாராயணா சாலை - நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக, வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம் தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய, மேட்லி வளைவில் இருந்து பர்கிட் சாலை சென்று, வெங்கட் நாராயணா சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி, வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். இந்த மாற்றம் இன்று முதல் ஓராண்டு வரை தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ