திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில், 280 ஏக்கர் பரப்பளவில், 580 தொழிற்கூடங்கள் உள்ளன. இவற்றில், 400 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, கார் உதிரி பாகம் தயாரிப்பு, பெயின்ட் கம்பெனி, ரசாயன கம்பெனிகள் உள்ளன.இந்த நிலையில், புட்லுார் மேம்பாலம் அருகில் செயல்பட்டு வந்த 'ஜென் பெயின்ட் மற்றும் கெமிக்கல்' கம்பெனி 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் அம்பத்துார் சுகந்தி, 56, ஷோபனா, 31, புஷ்கர், 35, கடம்பத்துார் பார்த்தசாரதி, 45, ஆகிய நான்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில், மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்ததில், பெயின்ட் மற்றும் ரசாயன கேன்கள் வெடித்து சிதறியது.இதில், கம்பெனிக்குள் இருந்த சுகந்தி, புஷ்கர் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் உடல் கருகி இறந்தனர். ஷோபனா மட்டும் உயிர் தப்பி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கூரை வெடித்து சிதறியதில் சாலையில் சென்று கொண்டிருந்த வேப்பம்பட்டு சீனிவாசன், 37, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.நேற்று முன்தினம் இரவு வரை, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, இருவரின் உடலை மட்டும் மீட்டனர். மற்றொருவர் நிலை என்னவானது என, தெரியவில்லை. இந்த நிலையில், நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில், மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டது.இறந்தோரின் நான்கு சடலங்களும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தீயில் கருகியுள்ளதால், டி.என்.ஏ., பரிசோதனைக்கு பின்னரே இறந்தவர் யார் என்பது தெரிய வரும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கம்பெனி உரிமையாளர் அம்பத்துார் கணபதி, 46, என்பவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.