சென்னை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள், தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவு மருந்தகமாக மாறியது. தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு மருந்தகங்கள், தமிழகம் முழுக்க 250க்கும் மேல் உள்ளன. இவற்றில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை என, தினமும் 12 மணி நேரம் செயல்படுகின்றன. இங்கு 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் விற்கப்படுவதால், மக்களிடையே வரவேற்பு உள்ளது.ஆனால், மருந்தாளுனர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக 11,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், பிடித்தம் போக 9,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், குடும்பத்தின் செலவுகள், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவற்றிற்கு போதிய வருவாய் இல்லாமல் தவிக்கின்றனர்.இது குறித்து, தமிழக கூட்டுறவு மருந்தாளுனர்கள் மற்றும் உதவியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கூட்டுறவுத்துறை மருந்தகங்களுக்கு, மருந்தாளுனர்களின் சான்றிதழின் பெயரிலேயே உரிமம் வழங்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட குறைந்தபட்ச ஊதியத்தில் புறநகர் பகுதி மருந்தாளுனர்களுக்கு மண்டலம் - 3 அட்டவணைப்படி, 16,826 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், 11,000 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு, அதிலும் பிடித்தம் போக, 9,000 ரூபாய் தான் கிடைக்கிறது. அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை.கொரோனா தொற்று காலத்தில் பேருந்து வசதி இல்லாத போதும், மக்கள் சேவை செய்தோம். அதை கருத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.