| ADDED : மார் 27, 2024 12:13 AM
சென்னை, சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் அனுப்பி வைக்கப்பட்டன.சென்னை சிந்தாதிரிப்பேட்டை குடோனில் இருந்து, 16 சட்டசபை தொகுதிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் ஆகியவை நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.இவற்றை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி:தேர்தலுக்காக 4,469 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டு கருவிகள், 4,842 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள், வீடியோ கண்காணிப்பு வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்படும்.சென்னையில் தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் வாயிலாக, 2.36 கோடி ரூபாய்; 5.33 கோடி ரூபாய் மதிப்பிலான 8,046 கிராம் தங்கம்; 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 ஐ - போன்கள் என, மொத்தம் 7.84 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.