சென்னை, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி வேட்பாளர்கள், சம பலத்துடன் மோதுவதால், வடசென்னை லோக்சபா தொகுதியில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வடசென்னை லோக்சபா தொகுதியில் தொழிற்சாலைகள் அதிகமுள்ளன. அதனால், அத்தொகுதியை கைப்பற்றுவதில், கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும்.கடந்த 1957 முதல் 2019 வரை, 16 லோக்சபா தேர்தல் நடந்துள்ளது. இதில், 11 முறை தி.மு.க.,வே வென்றுள்ளது. மீனவர்கள் ஓட்டு, இத்தொகுதியில் அவர்களுக்கு பலமாக உள்ளது.அதேபோல், இரு முறை கம்யூனிஸ்ட், தலா ஒரு முறை அ.தி.மு.க., - காங்., மற்றும் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளனர்.இதில், 1977, 1980 மற்றும் 2014ல் நடந்த தேர்தலில் மட்டுமே, தி.மு.க., - அ.தி.மு.க., நேரடியாக மோதின. தி.மு.க., இரு முறை வெற்றி பெற்றது. 2014 தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி கண்டது. அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வெங்கடேஷ், 4.06 லட்சம் ஓட்டுகள் பெற்றார். தி.மு.க.,வின் கிரிராஜன், 3.07 லட்சம் ஓட்டுகள் பெற்றார்.இதையடுத்து, 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வில் கலாநிதி, அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வின் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டனர். இதில், 4.61 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், கலாநிதி வெற்றி பெற்று எம்.பி.,யாக தேர்வானார்.மீண்டும் தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே கட்சியினர், தொகுதி மக்களிடையே ஆதரவு கோரி தேர்தல் பணிகளை துவக்கிவிட்டார், கலாநிதி. அவர் எதிர்பார்த்தது போலவே, இம்முறையும் கட்சி தலைமை சீட் வழங்கியுள்ளது. பண பலம், ஆள் பலம், கட்சி செல்வாக்கு நிறைந்த இவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் ராயபுரம் மனோகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவரும், தொகுதியில் நன்கு அறிமுகமானவர். நலத்திட்ட சேவைகளை தொடர்ந்து செய்து, மக்களிடம் நன்மதிப்பு பெற்றுள்ளவர். மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே, தேர்தல் ஆயத்த பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். அதற்கேற்ப அ.தி.மு.க., தலைமையும், மனோவை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது.இரு முக்கிய வேட்பாளர்களும், ஓட்டுகளை எப்படி கைப்பற்றுவர், அதற்காக என்னவெல்லாம் செய்வர், யார் வெற்றி பெறுவர் என்ற பரபரப்பு, தொகுதி மக்களிடையே தொற்றியுள்ளது.