| ADDED : மே 25, 2024 06:26 PM
வடபழனி: அப்பாவி மக்களிடம், 'கூரியரில் போதைபொருள் உள்ளது; சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து எந்தநேரமும் கைது செய்யலாம்' என, மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மிரட்டல் கும்பல் தொடர்ந்து பணம் பறித்து வருகிறது. சென்னை, வடபழனி, வி.பி.கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 52. இரு நாட்களுக்கு முன் இவரை, மொபைல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். மும்பையில் இருந்து பெடக்ஸ் கொரியரில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். கொரியர் நிறுவனத்தின் வாயிலாக தைவானுக்கு அனுப்பிய பார்சலில் போதை பொருள், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு இருந்ததாகவும், அங்குள்ள சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.'எனவே, நீங்கள் கைது செய்யப்பட்டால் அதிக பட்சம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இதில் இருந்து காப்பாற்ற எங்களால் தான் முடியும். உடனடியாக பணம் அனுப்பினால் மட்டுமே ஜாமின் பெற முடியும்' என மிரட்டியுள்ளனர்.இதனால் பயந்துபோன ஸ்ரீதர், அந்த நபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணிற்கு பணம் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நபர் மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சந்தேகமடைந்த ஸ்ரீதர், நேற்று வடபழனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.