| ADDED : மே 31, 2024 12:49 AM
ஓட்டேரி, ஓட்டேரி, ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் 249 எண் கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம், மது வாங்க வந்தவர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு குவார்ட்டர் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கேட்டதாக புகார் கூறியிருந்தனர். இதுகுறித்து கடை மேலாளரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதை அலட்சியப்படுத்தி, தொடர்ந்து மது பாட்டில்களை விற்பனை செய்தனர். வாடிக்கையாளர்கள் சிலர் கடன் அட்டை மற்றும் வங்கி அட்டைகளை பயன்படுத்தியும் பணம் செலுத்தினர். மதுபாட்டில் விலை வாக்குவாதத்தை தொடர்ந்து, திடீரென ஸ்வைப்பிங் மிஷின் மாயமானது. கடையில் தேடிய ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடமும் விசாரித்தனர். ஆனால், அவர்கள் நமுட்டு சிரிப்புடன் நகர்ந்தனர். மதுவிலையை அதிகரித்து விற்றதால், யாரோ ஒருவர் ஸ்வைப்பிங் மிஷினையே தள்ளிக் கொண்டு போனது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காணாமல் போன ஸ்வைப்பிங் மிஷினை கண்டு பிடித்து தரக்கோரி, கடை மேற்பார்வையாளர் சரவணன், ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.கடையில் பொருத்தப்பட்டுள்ள 'கேமரா' பதிவுகளை வைத்து போலீசார் விசாரிக்க உள்ளனர். இதில், ஊழியர்களுடன் கூடுதல் பணத்துக்காக நடத்திய வாக்குவாதமும் வெளிவரும் என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.