உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை கத்தரிக்கோலால் கொன்ற தந்தை கைது

மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை கத்தரிக்கோலால் கொன்ற தந்தை கைது

வியாசர்பாடி, மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், அதை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, சுந்தரம் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35. கூலி தொழிலாளி. இவர் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு, ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த, 5ம் தேதி, ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசுமருத்துவமனையில், விஜயலட்சுமிக்கு, மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய் - சேய் நலமுடன், 7ம் தேதி வீடு திரும்பினர்.அன்றிரவு, குழந்தைக்கு பால் கொடுத்து துாங்க வைத்த பின், விஜயலட்சுமி வெளியே சென்று உள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, குழந்தை குடல் சரிந்த நிலையில் ரத்தத்துடன் இருந்தது. உடனே சிகிச்சைக்காக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். குழந்தை வயிற்றில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டதால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடர்பு கொண்டு, விசாரணை நடத்த கோரினார். அதன் படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின், சமூக பணியாளர் பிரதிஷ்டா, புறத்தொடர் பணியாளர் ஷோபனா ஆகியோர் நேரில் சென்று, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தைக்கு வயிற்றில் மூன்று தையல்கள் போடப்பட்டு சிகிச்சையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி, சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இது குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் புகாரை தொடர்ந்து, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். உயிரிழந்த குழந்தையின், பிரேத பரிசோதனை அறிக்கை 14ம் தேதி வெளியான நிலையில், அதில், வயிற்றில் கூர்மையான ஆயுதம் கொண்டு குத்தியதற்கான அடையாளம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், கத்தரிக்கோலால் குழந்தையை குத்தியதை, தந்தை ராஜ்குமார் ஒப்புக் கொண்டார். ராஜ்குமாரை, நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ