-சென்னை,இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களுடன் மாதாந்திர உழவர் சந்தை, சென்னையில் முதல் முறையாக துவக்கப்படுகிறது. கீழ்ப் பாக்கத்தில் வரும், 4ம் தேதி இந்த சந்தை துவக்கப்படுகிறது. இதுகுறித்து இயற்கை வேளாண் கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்து கூறியதாவது:இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, சென்னை ஆர்கானிக் மார்க்கெட் இணைந்து சென்னையில் முதல் முறையாக மாதாந்திர இயற்கை உழவர் சந்தையை நடத்துகின்றன. கீழ்ப்பாக்கம், சி.எஸ்.ஐ., பெயின் பள்ளியில், ஆக., 4 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முதல் இயற்கை உழவர் சந்தை நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, அதே இடத்தில் சந்தை நடக்கும். இதைத் தொடர்ந்து, சென்னையின் மற்ற இடங்களில் வாராந்திர சந்தைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இயற்கை விவசாயிகள், மகளிர் குழுக்கள், சமூக நிறுவனங்கள் வாயிலாக, 20 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இயற்கை காய்கறி, கீரைகள், பழங்கள், பருப்பு வகைகள், வெல்லம், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், செக்கில் ஆட்டிய எண்ணெய் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்படும். மேலும், இயற்கை சாயத்தில் தயாரிக்கப்பட்ட கைத்தறி பருத்தி ஆடைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு உபயோக பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படும். ஆரோக்கியமான சமைத்த உணவு மற்றும் தின்பண்டங்கள், மூலிகை தேநீர் உள்ளிட்ட பானங்களும் கிடைக்கும். குழந்தைகளுக்கான அரங்குகளும் இருக்கும். வாடிக்கையாளர்கள் பைகள் கொண்டு வந்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதி இல்லை. இயற்கை வேளாண்மை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து முக்கிய நிபுணர்களின் அமர்வுகள், பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். மேலும், விபரங்களுக்கு 99620 43710, 89391 38207 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.