தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் சுற்றுச்சுவர், வேலி அமைக்காததால், குப்பை, கழிவு தேங்கியுள்ளன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி, அருகில் வசிப்போர் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலத்தில் பாதிப்பு அதிகரிக்கும் அச்சுறுத்தல் எழுந்தது.இதையடுத்து, காலி மனைகளில் உள்ள குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி கெடு விதித்துள்ளது.இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: காலிமனைகளின் உரிமையாளர்கள், தங்களுக்கு சொந்தமான மனைகளை சுத்தம் செய்து, 15 நாட்களுக்குள் வேலி அமைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், காலிமனைகளில் தேங்கியுள்ள குப்பை, மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் 2016ன் படி, 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.மேலும், பொதுமக்கள் தங்களது வீடு, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனத்தில் உற்பத்தியாகும் குப்பையை, உணவு, காய்கறி, பழக்கழிவுகள் போன்ற மக்கும் குப்பையையும், பிளாஸ்டிக் பேப்பர், அட்டை மற்றும் இதர உலர் கழிவுகள் போன்ற மக்காத கழிவுகளையும் தனித்தனியாக பிரித்து, தங்களது வீடு தேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அவ்வாறு பிரித்து வழங்காத வீட்டின் உரிமையாளருக்கு, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.